புதன், 25 ஏப்ரல், 2012

ஏப்ரல் 2012 இரவுவான் April 2012 nightsky




கோள்களின் நிலைகள்
2012 ஏப்ரல் 10 முதல் மே 9 வரை
சே.பார்த்தசாரதி
சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:
புதன்:            இக்கோள் ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து இம்மாத இறுதிவரை காலைகிழக்கு அடிவானில் தெரிந்தபோதிலும், மூன்றாம் வாரத்தில் நன்கு காணலாம். இம்மாதம் முழுவதும் இக்கோள் மீனம் தொகுதியில் உள்ளது.
 ( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த ஆகஸ்ட் மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)

சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:
செவ்வாய்:      இது இம்மாத இறுதியில் மாலையில் சூரியன் மறைந்தபின் கிழக்குவானில் உச்சிவானிற்கு அருகே தெரியும். இக்கோள் சிம்மம் தொகுதியில் உள்ளது.
வெள்ளி:        இக்கோள் மாலை மேற்கு வானில்  இம்மாதம் முழுவதும் நன்கு தெரியும். இது இக்காலம் முழுவதும் ரிஷபம் தொகுதியில் உள்ளது.
வியாழன்:        சூரியன் மறைந்தபின் மேற்கு அடிவானில்  தெரியும். இதற்கும் சூரியனுக்குமான பிரிவு தூரம் குறந்துகொண்டே வருவதால் இம்மாத மூன்றாம் வாரத்திற்குப்பின் இதைக் காண்பது கடினம். இக்கோள் மேஷம் தொகுதியில் உள்ளது.
சனி:              இக்கோளை, சூரியன் மறைந்து சிறிது நேரம்கழித்து, கிழக்கு அடிவானில் சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே காணலாம். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது
சில முக்கிய வான் நிகழ்வுகள்:
ஏப்ரல் 15:        சனிக்கோள் சூரியனுக்கு நேரெதிரே அமைதல் (opposition). அதாவது சூரியன் மறையவும் இது கிழக்கு வானில் உதிக்கும்.
ஏப்ரல் 18:        புதன்கோள் சூரியனிடமிருந்து அதிகபட்சமாக 27 டிகிரி பிரிந்து இருத்தல் (Western elongation) எனவே இன்று புதனை நீண்டநேரம் அதிகாலை கிழக்குவானில் காணலாம்.
ஏப்ரல் 21:        அமாவாசை
ஏப்ரல் 22:        லைரா விண்தூரள்கள் அதிகபட்சமாக மணிக்கு10 முதல் 20 வரை தெரியும் நாள். பூமி
 தாட்சர் வால் நட்சத்திரப்பாதையைக்கடக்கும் போது, அதன் உதிரிகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதால், அவை எரிமீன்களாக வானில் லைரா விண்மீன் தொகுதியிலிருந்து வருவதுபோன்று தோன்றுகின்றன. இந்நாளில் நிலவின் வெளிச்சம் இல்லாததால் இவ்வருடம் அதிகாலை 3 மணி பிறகு இதை நன்கு காணலாம்.
மே 5-6:           ஈட்டா கும்பம் விண்தூரல்கள் அதிகபட்சமாக மணிக்கு சுமார் 60 வரை அதிகாலை கிழக்குவானில் தெரியும் நாள். ஹாலி வால்மீனின் பாதையை பூமி கடக்கும் போது கும்பம் தொகுதியிலிருந்து விண்கற்கள் விழக்காணலாம். முழுநிலவின் பிரகாசம் காரணமாக இவ்வருடம் இந்நிகழ்வை நன்கு காண இயலாது.
மே 6:               முழுநிலவு

சர்வதேச விண்வெளிநிலையம் தமிழகத்தில் நன்கு தெரியும் சில நாட்கள்:
மே 4 :             பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது வடமேற்கு திசையில் சுமார் 6.56க்குதெரியத்தொடங்கி தென்கிழக்கு நோக்கிச்செல்கையில் சரியாக 07.01.52 மணிக்கு பூமியின் நிழலில் மறைந்து விடும். தமிழ்நாட்டில் மேற்கு அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரயமாக 20 முதல் 45டிகிரி வரை  இதைக் காணலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக