செவ்வாய், 24 ஜூலை, 2012

ஹிக்ஸ் போஸான்: பிரபஞ்சத்தில் நிறைக்குக் காரணமாகக் கருதப்பட்ட துகளைக் கண்டுபிடிக்கும் பிரமாண்ட ஆராய்ச்சியில் வெற்றி!ஹிக்ஸ் போஸான்: பிரபஞ்சத்தில் நிறைக்குக் காரணமாகக் கருதப்பட்ட துகளைக் கண்டுபிடிக்கும் பிரமாண்ட ஆராய்ச்சியில் வெற்றி!
            கடந்தமாதம் ஜுலை 4ம் தேதி செர்ன் ஆராய்ச்சிக் கூடத்தின் ஒரு முக்கிய அறிவிப்பை அறிந்துகொள்ள            உலகமே மிகுந்த ஆவலுடன் காத்திருந்தது.  அன்று அவ்வாரய்ச்சிக்கூடத்தின் தலைமை விஞ்ஞானிகள் “ஹிக்ஸ் போஸான்” எனப்படும் அடிப்படை அணுத்துகளைப் போன்ற ஒன்றை கண்டுபிடித்துவிட்டதாகவும் அது “ஹிக்ஸ் போஸான்” தானா என்பதை அடுத்தகட்ட சோதனைகள் மூலம் உறுதிபடுத்தப்படும் என அறிவித்தனர்.
            மனித வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் மிகப்பிரமாண்டமான ஆராய்ச்சி செய்து இத்துகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் இதுபற்றிய மேலும் சில தகவல்களையும் நாம் இக்கட்டுரையில் காணலாம்.
            ஒரு பொருளுக்கு எடை எதைப் பொறுத்தது என்று கேட்டால், அது அப்பொருளின் நிறையையும் அதன்மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையும் பொறுத்தது  என ஒரு  உயர்நிலைமாணவரால் கூட கூறமுடியும். சரி..அப்பொருளுக்கு நிறை எங்கிருந்து வந்தது என்றால் அதற்கு அணுவின் உட்கருவில் இருக்கும் புரோட்டான் மற்றும் நியூட்ரான்களே காரணம் என ஒரு மேல்நிலைமாணவர் எளிதில் காரணம் கூறுவார். அப்படியானால், புரோட்டானுக்கும் நியூட்ராணுக்கும் நிறை எங்கிருந்து வந்தது என்றால் புரோட்டான் மற்றும் நியுட்ரானின் உள்ளே இருக்கும் ’குவார்குகள்’ எனப்படும் அடிப்படைஅணுதுகள்களினால் (elementary atomic particles) என கல்லூரி மாணவர் எடுத்துரைப்பார்.  உடனே அடுத்த கேள்வியான குவார்குகளுக்கு  நிறை எப்படி வந்தது ? என்பதற்கு பதிலை அறியும் முன்னர் அணுவினைப் பற்றிய தற்கால விளக்கங்களை சுருக்கமாக நாம் அறிந்துகொள்ளலாம்.
            1950 களில் துகள் வேக முடுக்கி (particle accelerator) தொழில்நுட்பம் வளர்சி அடைய ஆரம்பித்தன் விளைவாக அணுத்துகளான நியூட்ரான் புரோட்டான் போன்றவை சில அடிப்படை துகள்களால் ஆனவை என கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துகள்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு அணுவின் “திட்ட மாதிரி” (Standard model of atom) கொள்கை தயாரிக்கபட்டது. இதன் முக்கிய நோக்கம் அடிப்படைத்துகள்களுக்கும் அடிப்படை விசைகளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே ஆகும். இந்த திட்டமாதிரியின்படி அடிப்படைத்துகள்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அணுவிற்கு நிறையைக் கொடுக்கும் துகள்களான பெர்மியான்கள் மற்றொன்று அடிப்படை விசைக்குக் காரணமான போஸான்கள். 
            பெர்மியான்கள் 6 க்குவார்குகள் மற்றும் 6 லெப்டான்களால் ஆனவை.  லெப்டான்கள் க்குவார்குகளைவிட எடை குறைந்தவை எனவேதான் அவை ‘மெல்லியவை’ என்னும் பொருள்பட லெப்டான்கள் என அழைக்கப்படுகின்றன.


            போஸான்கள் என்றால் போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியலுக்குக் கட்டுப்படும் துகள்கள் என்பதாகும். உதாரணத்திற்கு ஒளித்துகளான ஃபோட்டான், க்ளூஆன், W , Z and H போஸான் போன்றவை ஆகும். முக்கிய அடிப்படை விசைகளுக்குக் (fundamental forces) காரணமான இந்த போஸான்கள் விசை தாங்கிகள் என அழைக்கப்படுகின்றன. ஒளித்துகள் மின்காந்த புலத்திற்கும், குளூஆன்கள் வலிமையான உட்கரு விசைக்கும் , W & Z நலிந்த உட்கரு விசைக்கும் காரணமாகும்.
            உண்மையில் புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியவை அடிப்படை அணுத்துகள்கள் கிடையாது. அவை மேலே குறிபிடப்பட்ட சிலஅடிப்படைத்துகள் சேர்வதினால் கிடைக்கும் கூட்டுப் பொருளே (composite) ஆகும். உதாரணமாக இரண்டு மேல் (up) மற்றும் ஒரு கீழ் (down) க்குவார்குகள் சேர்த்ததுதான் ஒரு புரோட்டான்.
            இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். மேற்குவங்கத்தைச் சார்ந்த சத்யேந்திரநாத் போஸ் 1924 ஆம் ஆண்டு, இரு ஒளித்துகள்களை வேறுபடுத்த இயலாது என்பதை விளக்கும் கட்டுரையை மற்ற அறிவியல் வெளியீட்டார்கள் ஏற்றுக்கொள்ளாததால் போஸ் அதனை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பிவைத்தார். ஐன்ஸ்டீனும் அதை ஏற்றுக்கொண்டு அதனை மொழியாக்கம் செது ஒரு ஜெர்மனிய ஆய்வு பதிப்பகத்தின் மூலம் வெளியிடச் செய்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு , ஒரே ஆற்றலை பெற்று,   ஒன்றை ஒன்று வேறுபடுத்தமுடியாத ஒரே மாதிரியன துகள்களுக்கு போஸான்கள் என்ற பெயரை பால் டைராக்(Paul Dirac) என்ற  தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானி பெயர் சூட்டினார்.
            மீண்டும் நாம் நமது முக்கிய கேள்விக்கு வருவோம். அதாவது அடிப்படைத் துகள்களுக்கு நிறை எப்படி கிடைக்கின்றது? இதை விளக்குவதற்கு 1964 ஆம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்பவர் ஒரு தத்துவத்தைக் கூறினார். இதன்படி அணுவினுள் உள்ள இடைவெளி உட்பட பிரபஞ்சம் முழுவதும் ”ஹிக்ஸ் புலம்” ( Higgs Field) நிறைந்துள்ளது.  அடிப்படைத்துகள் அதன் ஊடாகச் செல்லும் போது , அத்துகளுக்கு நிறை ஏற்படுகின்றது. துகள்கள் எந்த அளவிற்கு ஹிக்ஸ் புலத்துடன் செயல்புரிகின்றதோ அந்த அளவிற்கு  அதற்கு நிறை கிடைக்கும். ஹிக்ஸ் புலம் இல்லை என்றால் அடிப்படை அணுத்துகள்கள் கட்டுப்பாடின்றி ஒளியின் வேகத்தில் சுதந்திரமாகச் செல்லும்.  எனவே அவை ஒன்றோடொன்று சேர்ந்து பருப்பொருள் (matter) என்பது பிரபஞ்சத்தில் உருவாகியிருக்க இயலாது என்பதே அவருடைய விளக்கம்.  பெருவெடிப்பு (Big bang) நடந்த சில வினாடிநேரங்களில் அணுவின் அடிப்படைத்துகள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்பட்டு நிறையைப்பெற்று புரோட்டான் நியூட்ரான்கள் தோன்றி இறுதியில் அணுக்கள் தோன்றின. இவ்வாறு பிரபஞ்சத்தின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அனைத்தையும் விளக்குவதற்கு ஹிக்ஸ் போஸான் தேவைப்படுகின்றது.
            திட்ட மாதிரியின் படி 6 லெப்டான்களுக்கு ’தனக்கான நிறை’ என்பதுகிடையாது. இருப்பினும் மின்சுமையுடைய எலெக்ரான், ம்யூயான், டௌ  போன்ற லெப்டான்கள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்படுவதால் அதற்குத்தகுந்தவாறு நிறையுண்டு.  ஆனால் மின்சுமையற்ற   3 வகை நியூட்ரினோக்கள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்புரியாததால் அவற்றிற்கு நிறை கிடையாது.
            இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். பருமன் குறைந்தவரை விட பருமன் அதிகமானவர் நீந்தும்போது நீருடன் அதிகமாக செயல்படவேண்டியிருப்பதால் அதிக நிறையை உணர்வார். இதேப் போன்றுதான் அடிப்படைத்துகள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்படுவதற்குத் தகுந்தவாறு நிறையைப் பெறுகின்றன.
            இத்துகள்களைப்பற்றிய லெடர்மேன் என்ற நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியின் புத்தகத்தினை ’கடவுள் துகள்” ( The God’s Particle) என விளம்பரத்திற்காக பதிப்பகத்தார் வெளியிட, விஞ்ஞானிகள் விரும்பாவிட்டாலும் இந்த பெயர் பொது மக்களிடையே பிரபலமாயிற்று.            மின்காந்தபுலத்திற்குஅடிப்படைத் துகளாக ஒளித்துகள் இருப்பது போன்று ஹிக்ஸ் புலத்திற்கு ஹிக்ஸ் போஸான் உள்ளது.  இதை உறுதி செய்யவே பிரமாண்டமான ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இதற்காக  சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அரைகிலோமீட்டர்  பூமிக்கு அடியில் 27 கி.மீ தூரத்திற்கு வட்டமான துகள் முடிக்கியை அமைத்து ஹேட்ரான் வகையில் ஒன்றாகிய புரோட்டான்களை அசூர வேகத்தில் மோதவிடுவார்கள். அவ்வாறு செய்யும்போது அவை அடிப்படை அணுத் துகள்களாக மாறும். அதாவது பிரபஞ்சம் தோன்றத்தின் ஆரம்பத்தில் பெருவெடிப்பு (Big bang) நிகழ்ந்தபோது எப்படி அணுக்கள் உருவாவதற்கு முந்தைய சூழல் நிழவியதோ அதே சூழலை உருவாக்கி ஹிக்ஸ் துகள்களைக் கண்டறிவதே இவ்வாரய்ச்சியின் நோக்கம் ஆகும். இதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டதால்       “ திட்ட மாதிரி” யின் தத்துவங்களும் வெற்றி பெறுகின்றது இல்லையேல் நாம் மீண்டும் ஒரு புதிய அணு மாதிரியை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவேண்டியிருக்கும்!

இந்த ஆராய்சியைப் பற்றிய சில புள்ளி விவரங்கள்:
  • LHC (Large Hadron collider) எனப்படும் அணுவைப் பொடிப்பொடியாக்கும் ஆராய்சிக்கு ஆகும் செலவு 10பில்லியன் டாலர்.
  • LHC தான் உலகின் மிகப்பெரிய இயந்திரம்.
  • சூரியனின் மையத்தைவிட ஒரு லட்சம் மடங்கு வெப்பம் அதிகமாக உருவாகுவதும், பெருவெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சத்தில் குறைவான வெப்பநிலை -271.3°C (1.9 K) உருவாகுவதும் இங்குதான்.
  • 1015 புரோட்டான் - புரோட்டான் மோதல்கள் ATLAS & CMS உணர்வி மூலம் பகுத்து ஆய்வுசெய்யபட்டுள்ளது.
  • இந்த உணர்விகளில் இருந்து ஒரு செகண்டில் கிடைக்கும் தரவுகளை பதியும் குறுந்தகடுகளை (CD) 450 அடி உயரத்திற்கு அடுக்கலாம்.
  • 5175 விஞ்ஞானிகள், 1535 மாணவர்கள், 250 Ph.D பட்டம் பெற்ற பெண் விஞ்ஞானிகள் பங்குபெற்ற ஆராய்ச்சியாகும்.
 
 
நன்றி: விஞ்ஞான சிறகு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்           


சனி, 2 ஜூன், 2012

தமிழ்நாட்டில் வெள்ளி இடைநகர்வு 2012 ஜூன் 6

Please install latest Flash Player to run SunAeon Venus Transit 2012

வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு
நம்வாழ்வின் கடைசி வாய்ப்பு
நாம் அனைவரும் இவ்வருடம் ஜூன் 6ம் தேதி வெள்ளி இடைநகர்வு எனும் ஓர் அபூர்வ வான்நிகழ்வைக் காண இருக்கிறோம். வெள்ளிக் கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்வதையே வெள்ளி இடைநகர்தல் (Transit of Venus) என்கிறோம்.
            2004ம் ஆண்டு ‘வெள்ளி இடைநகர்வு” உலகம் முழுவதிலும் பொதுமக்கள் பலரால் பார்கப்பட்டது. 121 வருடங்கள் கழித்து நடந்த இந்நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் மக்களையும் காணச்செய்தது. இதன்பிறகு டிசம்பர் 2117ல்தான் நிகழும். எனவே தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் ஜூன் 6 நிகழ்விற்குப்பின் இதைக் காணமுடியாது. எனவேதான் இது ஓர் அரிய நிகழ்வாகிறது..
இந்நிகழ்வில் அப்படியென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.. இந்நிகழ்வின் மூலமே நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு எவ்வளவு என கணக்கிடப்பட்டது.
எப்போது காணலாம்?
                        இந்த நிகழ்வு ஐந்துகட்டங்களாக நடைபெறுகின்றது.
1.     வெள்ளி  நுழையும்முன் சூரியதட்டினை வெளிப்புறமாக தொடுதல்
2.     வெள்ளி முழுவதுமாக சூரியதட்டினுள் சென்றுவிடுதல்
3.     வெள்ளி நகர்வின் மையப்பகுதி
4.     வெள்ளி வெளியேறும் முன் சூரியதட்டின் உட்புறத்தைத் தொடுதல்
5.     முழுவதுமாக வெளியேறிவிடுதல்.
சென்னையில் இந்த ஐந்து கட்டங்கள் தெரியும் நேரங்களைக் கீழே காணவும்.


தமிழ்நாட்டின் தெற்கே செல்லச் செல்ல அதிகபட்சமாக 15 வினடிகள் வரை இந்நேரங்கள் தாமதமாகலாம். முதல் இரண்டுநிகழ்வுகளும் தமிழ்நாட்டில் சூரியோதயத்திற்குமுன் நடப்பதால் நம்மால் காண இயலாது. சூரியன் உதித்ததிலிருந்து (காலை 5.41 மணி முதல்) கடைசி  நிகழ்வுவரை நம்மால் காண இயலும்.

வெள்ளி இடைநகர்வு தெரிந்த / தெரியும்  வருடங்கள்
ஜுன்

1761
1769

2004
2012

2247
2255
டிசம்பர்
1631
1639

1874
1882

2117
2125


இந்நிகழ்வை எவ்வாறு காண்பது?
இந்நிகழ்வினைப் பார்க்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்.
1.     சூரியகண்ணாடிகள் அல்லது வெல்டிங்கிலாஸ் மூலம் தொடர்து பார்க்காமல் சில வினாடிகள் மட்டும் பார்த்தல்,,
2.     சிறிய கையடக்கக் கண்ணாடி( எந்த வடிவமானாலும் சரி) மூலம் சூரிய பிம்பத்தை வட்டமாக தெரியுமாறு இருட்டறையின் சுவற்றில் வீழ்த்திப் பார்த்தல், செய்முறையை கீழே காணவும். 
3.     தொலைநோக்கி மூலம் பிம்பத்தை திரையில் வீழ்த்திப் பார்த்தல்.
எச்சரிக்கை! ஒருபோதும் சூரியனை நேரடியாகக் காணாதீர்! ஏனெனில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் நம் கண்ணிலுள்ள லென்சுகளால் குவிக்கப்பட்டு விழித்திரை நிரந்தமாக பாதிக்கப்படும். எனவே பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

செய்முறை
தேவையான பொருட்கள்: சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, சுமார் 1செ.மீ விட்டம்   துளையிட்ட அட்டை
1.     சிறிய கண்ணாடி (Pocket mirror) மூலம் சூரிய வெளிச்சத்தை இருட்டறையில் புள்ளிகளற்ற சமதளமான வெள்ளை சுவற்றிலோ அல்லது காகிதத்திலோ விழச்செய்யவும்.
2.     கண்ணாடியின் முன்பாக சுமார் ½ மீட்டர் தூரத்தில், துளையிட்ட அட்டையை கண்ணாடிக்கு செங்குத்தாக பிடிக்கவும்.அல்லது அதை இடைவெளி இல்லாது கண்ணாடியில் ஒட்டிவிடவும்.
3.     இப்போது சூரியனின் பிம்பத்தை இருட்டறையில் காணலாம். மேலும் அதில் சூரியபுள்ளிகளையும், வெள்ளி கோள் கடந்து செல்வதையும் காணலாம்.
4.     சூரிய பிம்பத்தின் விட்டம் 12-15 செ.மீ இருப்பதால் கரும்புள்ளியாகத் தெரியும் வெள்ளியின் விட்டம் 3.5 – 4.5 மி.மீ இருக்கும்.
குறிப்பு:
1.     15 செ.மீ விட்டம் உள்ள பிம்பம் தெரிய வேண்டுமானால் 15மீ (50 அடி) தூரத்திலிருந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யவேண்டும். அதாவது X செ.மீ விட்டம் உள்ள பிம்பம் வேண்டுமெனில் X தூரத்திலிருந்து கண்ணாடியை பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.
2.     விட்டம் பெரியதாக ஆக, பிம்பத்தின் வெளிச்சம் குறைந்து கொண்டே வரும்.
3.     பிம்பத்தினை ஒரு வரைபடத்தாளில் (graph Sheet) விழச்செய்து, சூரியன் மற்றும் வெள்ளியின் பிம்பங்களை ஒரே நேரத்தில் வரைந்தால், வெள்ளியைவிட சூரியனின் பிம்பம் எத்தனை மடங்கு பெரியதாக இருக்கிறது எனக் கணக்கிடலாம்.

பாதுகாப்பான முறையில் இந்த அரியநிகழ்வை தாங்கள் ஜூன் 6 அன்று காண தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துக்கள்!

வெள்ளி இடைநகர்வு 2012, ஜூன் 6.

புதுக்கோட்டை: ""வரும் ஜூன் ஆறாம் தேதி வானில் நடக்கும் வெள்ளி இடைநகர்தலை வெறும்கண்ணால் பார்ப்பது ஆபத்து,'' என்று கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

வானில் அபூர்வமாக நடக்கும் நிகழ்வுகளில் வெள்ளி கோளானது சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே நகர்ந்து செல்லும், வெ ள்ளி இடைநகர்தல் ஆகும். கடந் த 400 ஆண்டுகளில் வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு 53 முறை நடந்துள்ளது. கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு நடந்தது.
இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வானது, அடுத்த முறை 105 ஆண்டுக்கு பின் தான் ஏற்படவுள்ளது. ஆகையால், தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் அடுத்தமு றை பார்க்க முடியாத அபூர்வமா ன நிகழ்வாக, வெள்ளி கோள் இ டைநகர்தல் பார்க்கப்படுகிறது.
தலைமுறை தாண்டிய அபூர்வ நிகழ்வை, அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு விழிப்புணர்வு இயக்கம் நேற்று முன்தினமும், நேற்றும் மாநில அளவிலான பயிற்சி பட்டறையை புதுக்கோட்டையில் நடத்தியது.
இதில், 50க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் பங்கேற்றனர். அந்த பயிற்சி பட்டறை நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, தேசிய அறிவியல் தொழில்நுட்ப பிரச்சார குழு உறுப்பினர் ராமலிங்கம், அறிவியல் பிரச்சார மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் ஜூன் ஆறாம் தேதி காலை ஆறு மணி முதல் 10.40 மணி வரை இந்தியாவில் உள்ளவர்கள் வெள்ளிகோள் இடைநகர்தலை காணலாம். அதை வெறும் கண்ணில் பார்ப்பது ஆபத்தானது. விழித்திரை நிரந்தரமாக பாதிக்கும். சூரியனையே வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.
டெலஸ்கோப் மூலம் சூரிய பிம்பத்தை தரையில் வீழ்த்தி வெள்ளி இடைநகர்தலை பார்க்கலாம். வெல்டிங் கிளாஸ் (எண் 14) மூலம் சிறிது நேரம் பார்க்கலாம். கண்ணாடி உதவியோடு அட்டையிலான நுண்துளை கேமரா மூலம் சூரிய பிம்பத்தை திரையில் வீழ்த்தி பார்க்கலாம்.
சிறிய கையடக்க கண்ணாடி மூலம் சூரிய பிம்பத்தை வட்டமாக தெரியுமாறு இருட்டறையில் வீழ்த்தி பார்க்கலாம். இவைதவிர வேறு எந்த வகையிலும் வெள்ளி இடைநகர்தலை பார்க்கக்கூடாது.
இந்த அபூர்வ நிகழ்வை பார்ப்பது தொடர்பான அறிவியலுக்கு புறம்பாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெள்ளி இடைநகர்தல் அபூர்வநிகழ்வை பார்ப்பது குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவுள்ளது.
மாநிலம் முழுவதும் 150 முதல் 200 வரையிலான டெலஸ்கோப் அமைத்து பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் 1,500 பேருக்கு பயிற்சிமுகாம் நடத்தி, அவர்கள் மூலம் மாநிலம் முழுவதும் வெள்ளி இடைநகர்தலை பார்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்

புதன், 25 ஏப்ரல், 2012

ஏப்ரல் 2012 இரவுவான் April 2012 nightsky
கோள்களின் நிலைகள்
2012 ஏப்ரல் 10 முதல் மே 9 வரை
சே.பார்த்தசாரதி
சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:
புதன்:            இக்கோள் ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து இம்மாத இறுதிவரை காலைகிழக்கு அடிவானில் தெரிந்தபோதிலும், மூன்றாம் வாரத்தில் நன்கு காணலாம். இம்மாதம் முழுவதும் இக்கோள் மீனம் தொகுதியில் உள்ளது.
 ( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த ஆகஸ்ட் மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)

சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:
செவ்வாய்:      இது இம்மாத இறுதியில் மாலையில் சூரியன் மறைந்தபின் கிழக்குவானில் உச்சிவானிற்கு அருகே தெரியும். இக்கோள் சிம்மம் தொகுதியில் உள்ளது.
வெள்ளி:        இக்கோள் மாலை மேற்கு வானில்  இம்மாதம் முழுவதும் நன்கு தெரியும். இது இக்காலம் முழுவதும் ரிஷபம் தொகுதியில் உள்ளது.
வியாழன்:        சூரியன் மறைந்தபின் மேற்கு அடிவானில்  தெரியும். இதற்கும் சூரியனுக்குமான பிரிவு தூரம் குறந்துகொண்டே வருவதால் இம்மாத மூன்றாம் வாரத்திற்குப்பின் இதைக் காண்பது கடினம். இக்கோள் மேஷம் தொகுதியில் உள்ளது.
சனி:              இக்கோளை, சூரியன் மறைந்து சிறிது நேரம்கழித்து, கிழக்கு அடிவானில் சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே காணலாம். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது
சில முக்கிய வான் நிகழ்வுகள்:
ஏப்ரல் 15:        சனிக்கோள் சூரியனுக்கு நேரெதிரே அமைதல் (opposition). அதாவது சூரியன் மறையவும் இது கிழக்கு வானில் உதிக்கும்.
ஏப்ரல் 18:        புதன்கோள் சூரியனிடமிருந்து அதிகபட்சமாக 27 டிகிரி பிரிந்து இருத்தல் (Western elongation) எனவே இன்று புதனை நீண்டநேரம் அதிகாலை கிழக்குவானில் காணலாம்.
ஏப்ரல் 21:        அமாவாசை
ஏப்ரல் 22:        லைரா விண்தூரள்கள் அதிகபட்சமாக மணிக்கு10 முதல் 20 வரை தெரியும் நாள். பூமி
 தாட்சர் வால் நட்சத்திரப்பாதையைக்கடக்கும் போது, அதன் உதிரிகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதால், அவை எரிமீன்களாக வானில் லைரா விண்மீன் தொகுதியிலிருந்து வருவதுபோன்று தோன்றுகின்றன. இந்நாளில் நிலவின் வெளிச்சம் இல்லாததால் இவ்வருடம் அதிகாலை 3 மணி பிறகு இதை நன்கு காணலாம்.
மே 5-6:           ஈட்டா கும்பம் விண்தூரல்கள் அதிகபட்சமாக மணிக்கு சுமார் 60 வரை அதிகாலை கிழக்குவானில் தெரியும் நாள். ஹாலி வால்மீனின் பாதையை பூமி கடக்கும் போது கும்பம் தொகுதியிலிருந்து விண்கற்கள் விழக்காணலாம். முழுநிலவின் பிரகாசம் காரணமாக இவ்வருடம் இந்நிகழ்வை நன்கு காண இயலாது.
மே 6:               முழுநிலவு

சர்வதேச விண்வெளிநிலையம் தமிழகத்தில் நன்கு தெரியும் சில நாட்கள்:
மே 4 :             பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது வடமேற்கு திசையில் சுமார் 6.56க்குதெரியத்தொடங்கி தென்கிழக்கு நோக்கிச்செல்கையில் சரியாக 07.01.52 மணிக்கு பூமியின் நிழலில் மறைந்து விடும். தமிழ்நாட்டில் மேற்கு அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரயமாக 20 முதல் 45டிகிரி வரை  இதைக் காணலாம்